ஆழிப்பேரலை இன்றுடன் 14வருடங்கள் நிறைவு

0
219

ஆழிப்பேரலை இன்றுடன் 14வருடங்கள் நிறைவு

தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 14வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில, மத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே இன்றையதினம் முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் இன்று காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது.  இதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்துகொள்ளவிருப்பதுடன் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது. சகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25மணி முதல் 9.27மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
கடந்த 2004 டிசம்பர் மாதம் 26-ம் திகதி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 14ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை தாக்கியது. இதனால் ஆசிய நாடுகளில் மத்திரம் 02 இலட்சத்து 30ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகினர்.
இந்நிலையில், இலங்கையின் 25மாவட்டங்களிலும், 25விழிப்புணர்வு நிகழ்வுகளும், சர்வமத நிகழ்வுகளும்இன்று காலை 9.00மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.