காங்கேசன்துறை முகத்திற்கு போக்குவரத்து சரக்கு கப்பல்

0
157

காங்கேசன்துறை முகத்திற்கு போக்குவரத்து சரக்கு கப்பல்

காங்கேசன்துறை துறைமுகத்தை, 2021-ம் ஆண்டின் இறுதி அளவில், சரக்கு போக்குவரத்து கப்பல்களை கையாளக்கூடிய துறைமுகமாக மாற்றி அமைப்பதற்கான துரித அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தியாவிடமிருந்து நிவாரண அடிப்படையில் பெற்றுக்கொண்ட ரூபா 45.27 மில்லியன் கடனின் கீழ், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு, இதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் ஆகியோர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் எதிர்வரும் பெப்ரவரி 15-ம் திகதி காங்கேசன்துறை பிரதேசத்திற்கு சென்று பார்வையிட உள்ளனர். காங்கேசன்துறை துறைமுகமானது, தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, இத்திட்டத்தின் கீழ் அதன் நீர் எல்லை முற்று முழுதாக புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. அத்துடன் சரக்கு போக்குவரத்து கப்பல்கள் பயணிக்கும் வகையில் அதன் ஆழத்தை 9m வரை அதிகரிப்பதற்கும், ஒரு படகுத்துறையை புனர் நிர்மாணம் செய்வதற்கும், மற்றுமொரு படகுத்துறையை புதிதாக நிர்மாணிப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் 15ஏக்கர் நிலப்பரப்பில், இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையினால் இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பின்னர் அது 50ஏக்கர் பிரதேசம் வரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். காங்கேசன்துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்து கப்பல்கள் வரும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைக்கு பாரிய நன்மை கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன் இதன்மூலம் வடமாகாணத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதோடு அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யவும் முடியும் என தெரிவித்தார்.