
மாதம் வைகாசி வந்தாலே
முள்ளிவாய்க்கால் தான்
கண் முன்னே…
என்ன எழுதுவதென்று
தெரியவில்லை
ஏனோ எதுவும் பிடிக்கவில்லை
கண்கள் வலியை உணர்கிறது
கண்ணீர் ஆறாய்ப் பெருகுகிறது!
இறந்த தாயின் மார்பினிலே
பாலைக் குடித்த மழலையின்
அவலத்தினை
ஈழ நிலத்தினில்
மட்டுமல்லா
வேறெங்கும் கண்டதுண்டோ?
வயிற்றுப் பசியால்
கஞ்சிக்காய்
வரிசையில் நின்ற
அப்பாவிகளை
கொத்துக் கொத்தாய்
பலி எடுத்தார்
தட்டிக் கேட்க நாதி இல்லை
தமிழன் என்பதனால் தானோ?
உயிரைக் கையில் பிடித்தபடி
குண்டு மழையிலும்
தப்பிச் சென்று
அடைக்கலம் புகுந்த
கன்னியரை
வாயால் சொல்ல முடியா
வதை செய்து
துடிக்க வைத்தே
கொலை செய்தார்
இரக்கமற்ற கொடுங்கோலர்!
ஏதும் அறியா
பிஞ்சுப் பாலகர்
எதிர்கால கனவை சுமந்த
கன்னியர் காளையர்
நடக்கவே முடியாத
அப்பு ஆச்சியர்
இன்னும் பலரை… உயிருடன்
கொடுத்து விட்டு காணாமல் ஆக்கப்பட்டு
இன்றும் தேடி அலைகின்றோம்!
எந்தக் கேள்விக்கும் பதிலில்லை
எதையும் மறக்க முடியவில்லை
எந்த வழியும் தெரியவில்லை
வலியும் மரத்துப்
போகிறது
எல்லாம் வெற்றாய்த்
தெரிகிறது
நாடு இன்றி
அலைகின்றோம்
வாழ்வே விடமாய்
கசக்கின்றது
உயிருடன் சடமாய்
திரிகின்றோம்!
பலதைக் கடந்து வந்தாலும்
எதுவும் மறந்து போகவில்லை
எதையும் மன்னிக்கவே
மாட்டோம்
மனதில் இருத்தி
வாழ்கின்றோம்
காலம் ஒருநாள் பதில்
கூறும்
அந்த நாளுக்காய்
காத்திருப்போம்!
-நிலாதமிழ்.
17.05.2024.
